அரசியல் செய்திகள் தமிழகம் வெற்றி கதைகள்

கீழடியில் மீண்டும் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது கீழடி. இங்கு பண்டைய தமிழர் நாகரீகம் இருந்ததற்கான ஆதாரத்தை கண்டறிய கடந்த 2015-ம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்றது. முதற்கட்டமாக நடந்த இந்த அகழாய்வில் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய மண் பானை ஓடுகள், ஆயுதங்கள், முதுமக்கள் தாழி உள்ளிட்ட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன. இதனையடுத்து 2016-ம் ஆண்டு 2-ம் கட்டமாகவும், 2017-ம் ஆண்டு 3-ம் கட்டமாகவும் கீழடியில் அகழாய்வு பணி நடைபெற்றது. இதில் கண்ணாடி துண்டுகள், பளிங்கு கற்கள் என சுமார் 1,600-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன.

வைகையாற்றுக் கலாச்சாரம் என ஆய்வாளர்களால் அழைக்கப்படும் கீழடி பள்ளிச்சந்தைத் திடலில் காணப்படும் தொல்லியல் மேடு 110 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் வெறும் 50 செண்ட் நிலப்பரப்பில் நடந்த அகழாய்வு மூலம், ஏறக்குறைய கி.மு. 1000-இல் தென்னிந்தியாவில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை,கலாச்சாரம் போன்றவற்றை நிரூபிப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

வரிசை வரிசையாகக் கால்வாய்கள்; அதன் முகப்பிலே பெரும் தொட்டிகள்; தொட்டிக்குள் தண்ணீர் உள் செல்லவும் வெளி வருவதற்குமான அமைப்புகள்; கால்வாய் தடத்தை ஒட்டிச் சிறியதும் பெரியதுமான ஆறு உலைகள்; கால்வாயின் ஆரம்பப் பகுதியில் வட்டக் கிணறுகள்; மூடிய வடிகால்கள், திறந்த வடிகால்கள், சுடுமண் குழாய்களினால் ஆன வடிகால்கள் என மூன்று விதமான வடிகால் அமைப்புகள் – என்றவாறு ஒரு முழுமையான நகர அமைப்பை உறுதி செய்யும் சான்றுகள், தென்னிந்தியாவில் முதன் முறையாகக் கீழடியில்தான் கிடைத்திருக்கிறது.

பத்திற்கும் மேற்பட்ட வீடுகள் அல்லது கட்டிடங்கள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டு, அதன் மேற்கூரைகள் ஓடுகளால் வேயப்பட்டு இருந்திருக்கலாம் எனவும், வீடுகளின் அருகே பட்டினப்பாலையில் குறிப்பிடப்படும் சுடுமண் உறைகேணிகளும் இருந்திருக்கலாம் எனவும் இங்கு கிடைத்துள்ள சான்றுகள் மூலம் அறிய முடிகிறது. மேலும், ஆப்கானிஸ்தானில் கிடைக்கும் சூது பவளத்திலான மணிகளும், ரோமாபுரியைச் சார்ந்த மட்பாண்டங்களும், வட இந்திய பிராகிருத எழுத்துக்களும் கிடைத்துள்ளன. தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கருப்பு, சிவப்பு நிறங்களிலான ஏறத்தாழ 1,000 கிலோகிராம் எடையளவுக்கு மண் ஓடுகளும் அகழ்வாராய்ச்சியில் கிடைத்திருக்கின்றன.

சிந்து சமவெளி நாகரிகத்தில் கூட மட்பாண்டங்கள் வெளிப்புறத்தில் சுடப்பட்டதைக் குறிக்கும் வகையில், அவற்றின் வெளிப்புறம் கருநிறத்தில் இருந்தன. ஆனால், கீழடியில் கிடைத்த மட்பாண்டங்கள் உட்புறத்திலிருந்து சுடப்பட்டதைக் குறிக்கும் விதமாக அவற்றின் உட்புறம் கருநிறத்தில் இருக்கிறது. கீழடியில் வாழ்ந்த சமூகம் தொழில்நுட்பரீதியில் முன்னேறிய சமூகமாக இருந்திருப்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. கீழடியில் தொழிற்பட்டறைகள் இருந்ததற்கான அடையாளங்களும் கண்டறியப்பட்டுள்ளன. நெசவுக்குரிய தக்கையில் துவங்கி எண்ணற்ற எளிய தொழில்நுட்பக் கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன. கீழடியில் கண்டறியப்பட்ட சுமார் 5,300-க்கும் மேற்பட்ட பொருட்களில் வணிகம், கலை, தொழில்நுட்பம், எழுத்தறிவு ஆகியவற்றின் சான்றுகளைக் காண முடிகிறது. மொத்தத்தில், ஒரு மேம்பட்ட நாகரிகத்தைக் கொண்ட சமூக அமைப்பாக கீழடி இருந்துள்ளது.

அகழாய்வு முடிவில் கீழடியில் வைகை ஆற்றின் கரையோரத்தில் பண்டைய தமிழர்கள் நகரம் அமைத்து வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன. இதனைத்தொடர்ந்து கீழடியில் தொடர்ந்து அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் கீழடியில் ஆய்வு செய்து 4-ம் கட்ட அகழாய்வுக்கு நிதி ஒதுக்கீடு செய்தார்.

இந்த நிலையில், கீழடியில் மீண்டும் அகழாய்வு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 2018-19-ம் ஆண்டில் அகழாய்வு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார். கீழடியில் மீண்டும் அகழாய்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

தமிழகத்தில் இன்று 43,051 மையங்களில் 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து தர இலக்கு.

admin

திருமா வைத்த செக்…! வேறு வழியின்றி ஸ்டாலின் ஒதுக்கிய 2 தொகுதிகள்…! சீரியசாகும் வைகோ…!

admin

தமிழக காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்த பாஜக மாநில இளைஞரணி :- Ds.பாண்டியராஜ்

admin

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com