உறவுகள் உலகம் செய்திகள் லைப் ஸ்டைல் வெற்றி கதைகள்

இறந்துவிடும் என்று தெரிந்தும் குழந்தையைப் பெற்று உறுப்பு தானம் செய்த தாய்

தனக்குப் பிறக்கும் குழந்தை இறந்துவிடும் என்று தெரிந்தும், குழந்தையைப் பெற்று உறுப்பு தானம் செய்த அமெரிக்கத் தாய், அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் உள்ள மாகாணம் டென்னிசி. இங்கு வசிப்பவர்கள் டெரிக் லோவட் (26), கிறிஸ்டா டேவிஸ் (23). கிறிஸ்டா 18 வாரக் கர்ப்பமாக இருந்தபோது அவரின் பெண் சிசு மூளை, மண்டையோடு, உச்சந்தலை இல்லாமல் பிறக்கும் விநோத நோயால் (anencephaly) பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

குழந்தை பிறந்து 30 நிமிடங்கள் மட்டுமே உயிருடன் இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அப்போது கிறிஸ்டா முன் இரண்டு தேர்வுகளே இருந்தன. உடனடியாக வலியை வரவழைத்து குழந்தையை வெளியே எடுப்பது அல்லது குழந்தை தானாகப் பிறக்கும்வரை காத்திருந்து உடலுறுப்பு தானம் செய்வது.

கிறிஸ்டா இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தார். இதுகுறித்துப் பேசும் அவர், ”என் மகளால் வீடு திரும்ப முடியாது என்று தெரிந்த பிறகு, நாங்கள் செய்ததை வேறெந்தப் பெற்றோரும் செய்ய மாட்டார்கள். ஆனாலும் அதைச் செய்ய முடிவு செய்தோம்.

40 வாரங்கள், இரண்டு நாட்கள் ஆன நிலையில் கிறிஸ்துமஸ் அன்று தேவதை பிறந்தாள். இதுவரை உணர்ந்திராத உணர்வை அனுபவித்தேன். அவளின் மீது பைத்தியமாகவே இருந்தேன்.

ஆச்சர்யப்படுத்தும் விதமாக, அவள் மருத்துவர்களின் எதிர்பார்ப்பையும் தாண்டி ஒரு வாரம் இந்த பூமியில் இருந்தாள். குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவுக்குப் பதிலாக, என்னுடனேயே மருத்துவமனை அறையில் இருந்தாள்.

கிடைத்த குறுகிய காலத்தில் மகளுடன் இருவரும் உலகையே மறந்து, வாழ்ந்தோம். புத்தாண்டின்போது அவளை என் கையில் ஏந்தியிருக்கும்போது உயிர் பிரிந்தது” என்று கிறிஸ்டா தெரிவித்துள்ளார்.

குழந்தை இறந்த பின், அதன் இதய வால்வுகள் இரண்டு குழந்தைகளுக்குப் பொருத்தப்பட்டன. நுரையீரல் உள்ளிட்ட சில உறுப்புகள் மருத்துவ ஆராய்ச்சிக்கு வழங்கப்பட்டது.

தற்போது உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் கிறிஸ்டா டேவிஸ்.

Source :- the hindu

Related posts

ஏன் பெண்களுக்கு வளைகாப்பு போடுறாங்க தெரியுமா.?

admin

திருப்பூரில் கருப்பு கொடி காட்ட வந்த மதிமுக-வினருக்கு அடி உதை,கடைக்குள் ஓடி ஒழிந்த வைகோ “மாஸ் காட்டிய”:- இந்து முன்னணியினர்

admin

அபிநந்தன் நாளை விடுவிக்கப் படுகிறார்: இம்ரான் கான் அறிவிப்பு!

admin

Leave a Comment